கண் கண்ணாடி மிக அவசியமா?

கண் கண்ணாடி மிக அவசியமா?

உணவுக் கட்டுப்பாடு, ஊட்டச்சத்து மிக்க உணவு, உடற்பயிற்சிகள் கண் பயிற்சிகள் கண்களுக்கு மிக மிக இன்றியமையாததாகும். ஆனால், அதே நேரத்தில் இவைகள் பார்வைத் திறனை மேம்படுத்தினாலும், பார்வைக் குறைபாடுகளை சரிசெய்யும் என நினைத்து கண்ணாடி அணிவதை தவிர்ப்பது தவறாகும் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும். 

கண் கண்ணாடியை தவிர்ப்பது எதனால்? 

தனக்கு பார்வைத் திறன் குறைவு என்பது மற்றவர்களுக்கு தெரிந்துவிடும், கண்ணாடி அணிவதால் வயதான தோற்றம் ஏற்படும், கண்ணாடி அணிவதால் முகத்தில் தழும்புகள் ஏற்படும்.... என பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், இவையாவும் அவரவர்களின் மனநிலையை பொருத்ததாகும். ஒரு சிலர், கண்ணாடி போட்டால் பழக்கமாகி விடும், கண்ணாடியின் திறன் , பருமன் ஏறிக்கொண்டே வரும் , கண்ணாடி இல்லாத தருணங்களில் சிரமப்பட வேண்டி வரும் என நினைக்கலாம். மேலும் சிலர், கண்ணாடி தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளலாம்.  இது ஒரு சில காரணங்களுக்கு சரியானதுதான், மறதியாய் வைத்து விட்டேன், கண்ணாடி வாங்க பணம் இல்லை கண் பரிசோதணை செய்ய நேரம் இல்லை என்று பல காரணங்கள்  சொல்லலாம்.  இந்த சாக்குப் போக்குகள் எதுவும் நல்லதல்ல. 

கண் கண்ணாடியை தவிர்ப்பதனால் பல்வேறு நிரந்தர பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். உதாரணமாக, கிட்டப்பார்வை குறைபாடு , தூரப்பார்வை குறைபாடு , ஒருதள அச்சுப்பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு பார்வைத் திறன் குறைவு காரணமாக அவர்களின் சில மேற்படிப்புகளுக்கும் . சில வேலைவாய்ப்புகளுக்கும் தகுதித் தன்மையை இழக்க நேரிடலாம் . அவர்கள் பார்வைத்திறன் குறைவு காரணமாக கண்ணாடி அணியாமல் கூர்ந்து பார்ப்பதன் மூலம் தலைவலி , கண் வலி , மயக்கம் , கண் சோர்வு, தூக்கம் போன்ற உடல் உபாதைகளை சந்திக்க நேரிடலாம் கண்ணாடியை அலட்சியம் செய்வதால் அவர்களின் வேலை நேரம் அதிகரிக்கலாம். வேலையின் படைப்புத்திறன் குறைவு மற்றும் படைப்பின் தரக்குறைவு, அதனால் ஏற்படும் நேர விரயம், பண விரயம், தர நிராகரிப்பு போன்றவை நேரிடலாம். 

மேலும் கண் கண்ணாடியை தவிர்ப்பதனால், அலட்சியமாய் போடாமல் விடுவதனால் மாணவர்களின் கல்வி கற்கும் திறன், அறிவை மேம்படுத்தும் திறன் குறையலாம். பிறகு படிக்கலாம் ; பிறகு செய்யலாம் என மெத்தனப் போக்கு உருவாகலாம். வெள்ளெழுத்து குறைபாடு உள்ளவர்கள், மற்றவர்கள் செய்தித் தாளை படிக்கும்போது, இவர்கள் தலைப்புகளை மட்டும் படிப்பவர்களாக இருப்பார்கள். எழுத்தாளர்கள், ஓவியர்கள், கலைஞர்கள் தனக்கு வயதாகி விட்டது. முன்பு போல் என்னால் படைப்பின் திறனையோ அல்லது வேகத்தையோ கொடுக்க முடியவில்லை என்று தனக்குத்தானே ஒரு வளையத்தை போட்டுக் கொள்ளும் தன்மை கூட பார்வை திறன் குறைபாட்டுக்கு கண்ணாடியை தவிர்க்கும் நிலையில் ஏற்படலாம் என்றால் அது  மிகையாகாது.

கண் கண்ணாடியை தவிர்ப்பதனால் சிலருக்கு மாறுகண் ஏற்பட வாய்ப்புள்ளது  இதனால் அவர்களுக்கு இரு கண் பார்வை மூலம் கிடைக்கும் பொருளின் பரிமாணம், பருமன், அளவு, தூரம் போன்றவற்றை மிகத்  துல்லியமாக கணிப்பதில் சிரமம் ஏற்படும். இதனால் வாகன விபத்து ஏற்படலாம். பந்து விளையாட்டுகளில் பரிசை இழக்கலாம். 

கண் கண்ணாடியை தவிர்ப்பதனால் சிலருக்கு ஒவ்வொரு கண்ணின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள ஏற்றுக் கொள்ள சிலநேரம் மூளையின் பார்வை அறிவு மறுக்கிறது. அதன் பார்வையை மறைக்கிறது. வலது மற்றும் இடது கண்களில் ஒரு பார்வைத் திறன் மற்றொரு பார்வைத் திறனில் இருந்து மிக வேறுபாடு இருந்தால் இரண்டு கண்களும் ஒத்து வேலை செய்வதில் ஏற்படும் சிரமம் கண்ணிருந்தும் கண் பார்வையை செயலற்றதாக்கும் தன்மையைத் தரும். 

கண் கண்ணாடி அணிவதோ அல்லது விழிஒட்டுவில்லை அணிவதோ இயற்கைக்கு மாறானது என்ற எண்ணம், செயல்பாடு தவறானது. கண், கண்ணின் அமைவிடம், கண்ணின் அமைப்பு இவைகளே கண் பார்வைக் குறைபாடுகள் பலவற்றிற்கு காரணிகள். மேலும் கருப்பு வெள்ளை திரைப்படக் காலத்திலேயே பயன்பாட்டில் முழு சதவீதமாய் இருந்த கண் கண்ணாடிகளின் மூலப்பொருளும், மண்ணில் இருக்கும் மூலப்பொருளும் ஒன்றே. இதனால் மருத்துவர்களும், மாற்றுமுறை மருத்துவர்களும், இயற்கை ஆர்வலர்களும், கண் பார்வை கோளாறுக்கு கண் கண்ணாடியை பரிந்துரை செய்யலாம் . 

தகவல் தொடர்புக்கு 93810 51009

Comments

Popular posts from this blog

வெள்ளெழுத்து ஏன்?

கண் பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம்?

வியப்பூட்டும் லேசர் சிகிச்சை