வியப்பூட்டும் லேசர் சிகிச்சை

வியப்பூட்டும் லேசர் சிகிச்சை

விழி ஒட்டு வில்லையின் (காண்டக்ட் லென்ஸ்) பயன்பாடு பற்றி பார்த்த நாம் ஒருபடி மேலே சென்று இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் விளைந்த பார்வைத்திறன் மேம்பாட்டு அறுவை மற்றும் லேசர் ஒளிக்கற்றை சிகிச்சை பற்றி காண்போம். 

கண்ணாடி அணிய பிடிக்கவில்லை, விழி ஒட்டுவில்லை அணிய பயம், பராமரிப்பு செய்வதில் சிரமம் இப்படி பல்வேறு காரணங்களால் மாற்று வழி தேடியவர்களுக்கு பார்வைத்திறன் மேம்பாட்டு சிகிச்சையின் வகைகளும், பலன்களும் வெளிச்சத்திற்கான விடியல் என்று கூறினால் மிகையாகாது. 

1949 ல் ஆரம்பித்த ஆராய்ச்சி 1980ல் பரிசோதனை முறையில் வெற்றி பெற்று , 1987ல் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டு 1990ல் அங்கீகரிக்கப்பட்டு 2003ல் மாபெரும் வளர்ச்சி பெற்று இன்று உலகின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக பல லட்சம் மக்கள் தங்கள் கண் பார்வை குறைபாடுகளை சரிசெய்து கொள்ள பார்வைத்திறன் மேம்பாட்டு (லேசர்) சிகிச்சையினை ஏற்றுக்கொண்டு பலன் அடைந்து வருகின்றனர். 

லேசிக் எனும் சிகிச்சை முறை விழி வெண்படலத்தில் லேசர் செலுத்தி அதன் இயல்பு ஆரத்தில் மாற்றம் செய்து பார்வைத்திறனை மேம்படுத்துகிறது. ஆரம்பக்கட்டத்தில் கிட்டப்பார்வை மேம்பாட்டிற்கு RK -'ரேடியல் கெரட்டாமி ' என்று ஆரம்பித்து பல்வேறு மக்களின் கண் அமைப்பு, பார்வைக் குறைபாடுகளை மையப்படுத்தி PRK; LASIK; EPILASIK; என பல்வேறு முறைகளில் இன்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

ஆர்கான் அணுக்கள் மற்றும் ப்ளோரின் வாயுக்கள் ஆகியவற்றின் சேர்க்கையால் உருவான ஒரு திடமற்ற மூலக்கூறு பிளவுபட்டு அல்ட்ரா வயலட் போட்டான்களை உருவாக்குகிறது . இந்த லேசர் போட்டின் எனும் மின்காந்த ஆற்றலை கருவிழிவெண்படலத்தில் செலுத்தி திசுக்களின் இடைமூலக்கூறு பிணைப்புகளை அழித்து திசுக்களை குறைத்து மாற்றத்தை ஏற்படுத்தி கருவிழிவெண்படலத்தின் ஒளி விலகல் திறனை மேம்படுத்தி பார்வைத்திறனை மேம்படுத்துகிறது . 

இன்று இவ்வளவு நுணுக்கமான இந்த சிகிச்சை பத்து நிமிட நேரத்துக்குள் பொதுமயக்கமே தராமல் மரத்துப்போகும் சொட்டு மருந்துகள் மூலமாக புறநோயாளி வகை சிகிச்சையாகவே செய்யப்படுகிறது .. என்ன விந்தை ... ! 

கிட்டப்பார்வை குறைபாட்டிற்கு லேசிக் முறையில் கருவிழி வெண்படலத்தை தட்டையாக்கியும் தூரப்பார்வை குறைபாட்டிற்கு கருவிழி வெண்படலத்தின் மையப்பகுதியை சற்றே செங்குத்தாய் மேல்நோக்கி குவித்தும் பார்வைக் குறைபாடுகள் சரி செய்யப்படுகிறது. 

லேசர் சிகிச்சை முறையில் கருவிழி வெண்படலத்தில் கிறல் போடப்படுகிறது . பின் அப்படலத்தின் மேலடுக்கு மட்டும் பிரித்து தூக்கப்படுகிறது. மிக முக்கியமான நடு அடுக்கல் லேசர் குவித்து குறைபாட்டிற்கு தகுந்தாற்போல புனரமைப்பு மாற்றம் செய்து பின் பழையபடி மேலடுக்கு தையல் இன்றி பொருத்தி பதிய வைத்து சிகிச்சையை முடிக்கின்றனர். 

பார்வை மேம்பாட்டு (லேசர்) சிகிச்சை யார் செய்து கொள்ளலாம்? கிட்டப்பார்வை 15D வரை குறைபாடு உள்ளவர்கள், தூரப்பார்வை 6D வரை குறைபாடு உள்ளவர்கள்  அச்சுத்திறன் குறை 6D வரை உள்ளவர்கள் பல்வேறு வகையா சிகிச்சைகளை மருத்துவர்களின் கலந்தாலோசனைக்குப் பின் பெறலாம் . 

பதினெட்டு வயது நிரம்பியவர்கள் செய்து கொள்ளலாம் . (21 வயதுக்கு மேல் செய்து கொள்வது நல்லது என்பது என் தனிப்பட்டக் கருத்து). லேசர் சிகிச்சையை செய்து கொள்வதற்கு முன்பு திறன் மாற்ற வேறுபாடு இல்லாமலும், விழி ஒட்டுவில்லை பயன்பாடு சில வாரங்களுக்கு இல்லாமலும், பயன் பாதிப்பு, குறை, நிறை, செலவு, எதிர்பார்ப்பு இவைகள் பற்றிய ஆலோசனை கேட்ட பின்பும் , சில தகுதி தன்மை ஆய்வுகள் செய்த பின்பும் சிகிச்சை பெறுவது நல்லது . 

பார்வை மேம்பாட்டு சிகிச்சையின் தகுதித் தன்மைகள்: 

பார்வை: பார்வை குறைபாட்டு அளவு, கண்ணின் அமைப்பு , கருவிழி வெண்படலத்திறன், ஆரம், தடிமன், செல்களின் அடர்த்தி, விழி ஊடகவில்லையின் திறன், கண்ணின் அளவு விட்டம், கண்ணின் ஈரத்தன்மை, விழித்திரை ஆய்வு, கண் அழுத்த ஆய்வு போன்ற கண் சம்பந்தமான ஆய்வுகளும் .. 

நீரிழிவுத்தன்மை, நோய் எதிர்ப்புத்தன்மை, ரணம் ஆறுவதற்கான தன்மை போன்றவைகளை ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் கொடுத்து சந்தேகங்கள் தெளிவு செய்து அதன் பின்னரே பார்வை மேம்பாட்டுத்திறன் (லேசர்) சிகிச்சைக்கு உறுதி செய்ய வேண்டும். பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், சுவாச காச நோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் ஆகியோருக்கு இச்சிகிச்சை அனுமதி இல்லை. 

மிக அதிகமான கிட்டப்பார்வை உள்ள சிலருக்கு லேசிக் சிகிச்சைக்கு பதில் உள்புறமாக செயற்கை ஒளி ஊடக வில்லை பொருத்தும் அதி நவீன சிகிச்சைகளும் பயன்பாட்டில் உள்ளது. (பாகிக் உள் விழி ஒட்டுவில்லை சிகிச்சை) , 

பார்வை மேம்பாட்டு சிகிச்சையின் நன்மைகள் : 

கண் கண்ணாடி அணிய பிடிக்காதவர்கள், விழி ஒட்டுவில்லை அணிவதில் சிரமம், உள்ளவர்கள். இரு கண்களுக்கு பார்வைத்திறன் குறைபாடு வித்தியாசம் உள்ளவர்கள் , அழகு காரணமாய் கண்ணாடி அணிய தயக்கப்படுபவர்கள் , மிகத் தடிமனான கண்ணாடி அணிபவர்கள் , கண்ணாடி பராமரிப்பு செய்வதில் சிரமம் உள்ளவர்கள் , கண்ணாடி அடிக்கடி தொலைந்து போகுதல் , மறந்து போகுதல் , உடைந்து போகுதல் நிலை உள்ளவர்கள் எல்லோருக்கும் சிறந்த தீர்வு இந்த லேசர் சிகிச்சை மற்றும் பாகிக் சிகிச்சை. மிகக் குறைந்த நேரம், புறநோயாளி வகை சிகிச்சை, வலி இல்லா முறை சிகிச்சை, விடுப்பு அல்லது ஓய்வு அதிகம் தேவைப்படாத சிகிச்சை என இதன் பயன்கள் ஏராளாம். 

பார்வை மேம்பாட்டு சிகிச்சை குறைபாடுகள்:

இன்றைய அறிவியல் வளர்ச்சியின் சாதனையாக பார்வை மேம்பாட்டு சிகிச்சையில் நன்மைகள் ஏராளம் .. ஏராளம் . அதேநேரத்தில் ஒரு சிலருக்கு ' கிளேர் ' ( Glare ) இருக்கலாம். கண் உலர் தன்மை நேரிடலாம். கண் கூச்சம் அதிகரிக்கலாம். விழி வெண்படல புண் வெகு சிலருக்கு ஏற்படலாம். ஆனால் , நன்மைகள்தான் ஏராளம் என்பதால் இதுபற்றி கவலைப்படத் தேவையில்லை. 

லேசிக் பார்வைத்திறன் சிகிச்சைக்குப் பின் , சில மணி நேரத்திற்கு முழு ஓய்வு தேவை. சிகிச்சைக்குப் பின் சில தினங்களுக்கு கண்களை தேய்க்கக் கூடாது . ஒருமாத காலத்திற்கு மிக கவனமாக இருக்க வேண்டும் . கணினி தொழில் செய்பவர்கள் ஒருசில தினங்கள் விடுப்பில் இருக்கலாம் . நீச்சல் போன்றவை 15 நாட்களுக்கு கூடாது . நோய்த் தொற்று கண்ணில் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

வெள்ளெழுத்து ஏன்?

கண் பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம்?