கண் பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம்?

கண் பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம்?

என்ன சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது?

கேரட், கீரைகள், பப்பாளி, விட்டமின் ஏ என்ற இந்த பதில் அனைவருக்கும் தெரிந்ததுதான். பொதுவாக நாம் எதை சாப்பிட்டாலும், நமது உடல் உட்கிரகித்து, உள் உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை கொடுத்துவிடும். ஆனால், சில நுண்ணூட்டச் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்பட்டால் சில செயல்பாடுகளில் குறை ஏற்படுகிறது. அதன்படி கண்களில் ஏற்படும் சில நுண்ணூட்டச் சத்துக் குறைபாடுகளை பற்றியும் அவை எந்த உணவுகளில் கிடைக்கிறது என்பது பற்றியும் பார்ப்போம்.

 கண் புரைக்கு பல காரணங்கள் என பார்த்தோம். அதில் ஒரு காரணம் ஆன்டாக்ஸிடன்ட் மற்றும் சில சில நுண்ணூட்டச் சத்துக் குறைபாடும் ஆகும். கண் பார்வை இழப்புக்கு காரணமான ' மேகுலர் டிஜெனரேஷன் ' பிரச்னைக்கும் இதுவே காரணம் . இவைகளுக்கு ' ஒமேகா ' எனப்படும் ' பேட்டி ஆசிட் ' தேவை . இது மீன் எண்ணெயில் (சாலமன் மீன் வகை) உள்ளது. சைவம்தான் வேண்டும் என்போர் பிளாக்ஸ் ஸீட் ' எனப்படும் ஆளிவிதை ஆயிலை பயன்படுத்தலாம். இவை தவிர லியூட்டின், ஸெக்ஸான்தின், விட்டமின் ஏ, பி , சி , இ இவைகளும் தேவை. இது போலவே கண்களின் பார்வையை மெல்லச் சாகடிக்கும் கண் அழுத்த நோயினை தடுக்கும் ஆற்றல் விட்டமின் சிக்கு உண்டு. இன்று கணினி மற்றும் கைப்பேசி அதிகம் பயன்படுத்துவதால் பலருக்கு ஏற்படும் உலர்கண் பிரச்னைக்கு ஒமேகா 3 ' அவசியம் தேவை. 

பொதுவான ஊட்டச் சத்துக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் என்ன? அவை எதில் உள்ளது? அவற்றை சப்ளிமென்ட் அல்லது மாத்திரை வடிவத்தில் சாப்பிடலாமா என பல கேள்விகள் எழலாம். என் பதில் என்னவென்றால் கண்கள் மட்டுமல்ல ... உடல் உறுப்புகள் அனைத்திற்கும் இயற்கையாக அந்தந்த நிலப்பரப்பில் விளையும் பலவண்ணக் காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் மற்றும் இதனுடன் சில கொட்டைப் பருப்புகள் என உட்கொண்டாலே போதும். ஆனால், நடைமுறையில் கார்போஹைட்ரேட் நிறைந்த சாதம், சப்பாத்தி போன்றவைகளை மட்டும் தேவையைவிட அதிகம் சாப்பிடுகின்றனர். மக்களின் வாழ்க்கை முறை உணவுப் பழக்கம் மிகவும் மாறிவிட்டது. பீட்சா, பர்கர், பப்ஸ், பரோட்டா, நூடுல்ஸ் பாஸ்தா என கலோரி மிகுந்த நார்ச்சத்தே இல்லாத உணவை உட்கொள்கின்றனர். மேலும் , மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் குளிர்பானங்கள், துரித உணவுகள் அதுவும் இரவு 11, 12 மணிக்கு உட்கொள்கின்றனர் . இந்த உணவு முறைகள் நிச்சயமாக நுண்ணூட்டச் சத்துக்கு வாய்ப்பே தருவதில்லை. விலை மலிவாக கிடைக்கும் கொய்யா, பப்பாளி, நெல்லிக்கனி, முருங்கை கறிவேப்பிலை இவைகளை எல்லாம் இளைய தலைமுறை கண்டு கொள்வதே இல்லை. எனவே உணவுமுறையிலும், வாழ்வியல் முறையிலும் புரட்சியும், விழிப்புணர்வும் வந்தால் மட்டுமே இதற்கு தீர்வு ஏற்படும். 

பழக்கங்களை மாற்றுவது கடினம். இதற்கு ஒரு பயிற்சி தேவை. அதற்கான வழிமுறைகளையும், உணவு முறைகளையும் குறைந்தபட்சம் 21 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டும். 48 நாட்கள் கடைப்பிடித்தால் அது புதுப்பழக்கமாக உருவாகி விடும். மருத்துவர் உட்பட யாரும் உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்றிவிட முடியாது . அதை உங்களால் தான் மாற்ற முடியும். நீங்கள் மாறிய பிறகு உங்கள் குடும்பத்தினர் மாற்றும் சூழ்நிலையை உருவாக்குங்கள். அதாவது சத்து மிகுந்த, ஊட்டச்சத்து நிரம்பிய உணவுகளை சுவைபட செய்து அதை அலங்கரித்து பரிமாறுங்கள். அதை சாப்பிடும் ஈர்ப்பு மற்றவர்களுக்கும் ஏற்படும்.



Comments

Popular posts from this blog

வெள்ளெழுத்து ஏன்?

வியப்பூட்டும் லேசர் சிகிச்சை