கண் புரையும் தீர்வுகளும்
கண் புரையும் தீர்வும்
மனிதன் தோன்றிய காலம் தொட்டே கண்ணில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் மிகமிகப் பெரிய கொடிய நோயாக இருந்தது கண் புரை (கேட்ராக்ட்). வயதாகி விட்டது ; கண் தெரியவில்லை என கைவிடப்பட்டவர்கள் ஏராளம் . உலகின் மிகப் பழமையான அறுவை சிகிச்சை கண் புரை அறுவை சிகிச்சை என்றால் அது மிகையாகாது ஆம்! விஞ்ஞான வளர்ச்சிக்கு முன் புரட்சி கண்ட கண் புரை நீக்க அறுவை சிகிச்சை மிகப் பலருக்கு பயனும் வெகு சிலருக்கு பிரச்னையும் தந்துள்ளது.
கண் புரை கண்டவர் வைத்தியரை நாடும்போது தைரியம் கொடுத்து, மனப் பயிற்சிகள் கொடுத்து, நம்பிக்கை கொடுத்து (இவைகளே மயக்க மருந்து போல) நெருஞ்சி முள் அல்லது கூர்மையான முள் கொண்டு புரை கொண்ட பகுதியை குத்தி உள் தள்ளிவிட்டு கோழி அலகு ரத்தம் , தாய்ப்பால் போன்றவைகளை விட்டு குணப்படுத்தி உள்ளனர். (ஆதாரப்பூர்வமான சான்றுகள் இல்லை) பார்வையே சற்றும் இல்லாத சிலருக்கு இச்சிகிச்சை ஓரளவு பயன் தந்தாலும் மிகுந்த வலியும் பின் மோசமான சில விளைவுகளையும் சந்திக்க நேர்ந்தாலும் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு இவை படிக்கற்களாய் அமைந்தன.
கண் புரை என்றால் என்ன? கண் புரை என்பதுவிழி ஊடக வில்லையின் ஒளி ஊடுருவும் தன்மையிழத்தலே ஆகும். இதனால் பார்வையின் ஒளி விழியினுள் செல்வதில் ஏற்படும் சிரமமே கண் புரை பிரச்சனை ஏற்பட்டோருக்கு பார்வைக் குறைபாடு அல்லது மிக மங்கலான (திரைக்குப் பின் பார்ப்பதுபோல) பார்வை இருக்கும்.
கண் புரை நோய் எவ்வாறு ஏற்படுகிறது?
1 பெரும்பாலான கண் புரை வயதானவர்களுக்கு ( ஸெனைல் கேட்ராக்ட்) ஏற்படுகிறது. ஊட்டச்சத்து குறைவினாலும் முதுமையில் விழி ஊடக வில்லையில் ஏற்படும் மாற்றங்களாலும் மெல்ல மெல்ல பார்வை பனிப்பொழிவின் போதோ, புகை மூட்டத்தின் போதோ, மேக மூட்டம் போன்றோ மிக மங்கலாக ஆரம்பிக்கும். நாளாக நாளாக பார்வைத்திறன் குறைந்து கொண்டே வரும்.
2 சிலருக்கு கண்ணில் அடிபடும் போது .. பந்து படுதல், பலத்த காயம் கண்ணிலோ கண்ணிற்கு அருகிலோ, மரம் செடியின் கிளைகள் வேகமாகப் படுதல், கூர்மையான பென்சில், குச்சி இவைகள் படுதல் காரணமாய் கண் விழி ஊடக வில்லையில் அதிர்வு ஏற்பட்டு புரை விழும். (ட்ரோமேட்டிக் கேட்ராக்ட்)
3 பிறக்கும்போதே குழந்தை கண் புரையுடன் பிறக்கலாம். கருவுற்ற தாய் எடுக்கும் வீரிய மிகு மருந்துகளின் பின்விளைவாக பரம்பரை காரணமாக , இவற்றோடு மற்ற சில காரணங்களும் இருக்கலாம். (கன்ஜனைட்டல் கேட்ராக்ட்)
4 நீரிழிவு நோயாளிகளுக்கு நீரிழிவின் பக்கவிளைவாக மற்றும் ஆஸ்துமா , இதய நோயாளிகள் உட்கொள்ளும் ஸ்டீராய்டு கேட்ராக்ட் ) மருந்துகளால் கண் புரை வரலாம். (டாக்ஸிக் கேட்ராக்ட்)
5 அல்ட்ரா வயலட் ஒளி , எக்ஸ் கதிர்கள் , வேறு சில கதிர்கள் காரணமாக கண் புரை வரலாம். ( ரேடியஷனல் கேட்ராக்ட் )
காரணங்கள் பல இருந்தாலும் கண் புரை நீக்கத்திற்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வு . மிக மிக மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால் ஒருவர் 90 சதவீதம் கண் புரையினால் மட்டும் பார்வை இழந்திருப்பாரேயானால் அந்த 90 சதவீதமும் அறுவை சிகிச்சைக்குப் பின் திரும்பப் பெறும் வாய்ப்புகள் உண்டு
அறிகுறிகள்
கண் புரையினால் விழி ஊடக வில்லையில் ஏற்படும் மாற்றங்களை பொறுத்து சப் கேப்ஸிலர் வகை , நியூக்ளியர் வகை , கார்டிகல் வகை என வகைப்படுத்தலாம்.
> ஆரம்பத்தில் லேசாக மங்கலாக தொடங்கும் பார்வை படிப்படியாய் குறைய ஆரம்பித்து முற்றிலும் மங்கலாக அல்லது பார்வையற்ற நிலை வரை போகலாம்
> படிப்பதில் சிரமம் அல்லது படிக்கும்போது போட வேண்டிய கண் கண்ணாடி அடிக்கடி மாற்றும் நிலை
> நிறங்கள் சாயம் போனது போல் தெரிதல்
> சிலருக்கு இரவில் பார்வை குறையும் . விழி ஊடக வில்லையின் ஓரப்பகுதியில் புரை இருப்பின் இரவு நேரம் அல்லது இருட்டான அறை பகுதியில் பார்வை குறையும்.
> சிலருக்கு பகலில் பார்வை குறையும். விழி ஊடக வில்லையின் மையப் பகுதியில் புரை இருக்குமானால் வேகமாக பார்வைக்குறைபாடு ஏற்படும் . உடனடியாக அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும்.
கண் புரை சிகிச்சை
> ஆரம்பக் காலக் கட்டத்தில் கண் பரிசோதனை செய்து கண்ணாடி அணிதல் நன்று .
> இயல்பு வாழ்க்கையில் படிக்க , பார்க்க , தொழில் செய்ய ... இப்படி பாதிப்பு ஏற்பட்டால் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்யலாம்.
> ஆரம்பக் கட்டத்தில் இன்ட்ரா கேப்ஸூலர் எக்ஸ்ட்ராக்ஷன் முறையில் முழு லென்ஸ் எடுத்து விடுவார்கள் . அதன் பின்னர் 8. ஜீரோ தையல் போடுவர் . குணமாக நாட்கள் ஆகும் . ஏனெனில் 12 எம்எம் அளவுக்கு அறுவை நடக்கும் குணமான பின் ஒரு தடிமனான கண்ணாடி அணிய நேரிடும் . ஆனால் , இந்த முறை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே முடிந்து விட்டது.
> 30 ஆண்டுகளுக்கு முன் மேற்கண்ட முறையில் அறுவைக்குப் பின் ஆன்டிரியர் சேம்பர் லென்ஸ் வைக்கும் முறை இருந்தது . பின்னாளில் எக்ஸ்ட்ரா கேப்ஸூலர் எக்ஸ்ட்ராக்ஷன் முறையில் போஸ்டிரியர் சேம்பர் லென்ஸ் வைக்கும் முறை அறிமுகம் ஆனது . இதில் 3 பீஸ் , | பீஸ் என வகை வளர்ந்தது .
> இன்றைய நவின காலக்கட்டத்தில் 1.5 எம்எம் மட்டும் துளையிட்டு கண் புரை கொண்ட இயற்கை விழி ஊடக வில்லையின் மேற்புற தோலையும் நடுப்பகுதியையும் கரைத்து எடுத்துவிட்டு சுருட்டி வைக்கக் கூடிய செயற்கை விழி ஊடக வில்லை பொருத்தி மிக விரைவாக செய்யக் கூடிய அதி நவின சிகிச்சைகள் வந்துவிட்டன . மேலும் பல்குவிய லென்சும் பொருத்திக் கொள்ளலாம் .
> உலகின் மிகப் பழமையான எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் தினமும் பலநூறு அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படுகின்றன . அதற்காக நாம் நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும் .
கண் புரை சிகிச்சையின் பக்கவிளைவுகள்
இன்று பக்கவிளைவுகள் மிக மிக குறைவாகவே உள்ளது . கண் கூசுதல் , டிஸ்லொகேஷன் , தொற்று பரவுதல் போன்ற ஒருசில பிரச்னைகள் ஏற்படலாம் ஆனால் , இன்று பக்கவிளைவுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை
சிகிச்சைக்கு முன்னும் பின்னும்
அறுவை சிகிச்சை , புறநோயாளிகளைப் போன்று எளிமையாக உள்ளது . பக்க விளைவுகள் ரொம்பவே குறைந்து விட்டது . முன்னும் பின்னும் கடைபிடிக்க வேண்டிய கவன பாதுகாப்புகள் எச்சரிக்கையும் குறைந்து விட்டது இருப்பினும் மருத்துவர்கள் கூறும் எளிய அறிவுரைகளை கடைபிடிக்க வேண்டும் . தேசிய பார்வைக் குறைபாடு தடுப்பு மற்றும் பார்வை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை இலவசமாகவும் , பாதுகாப்பாகவும் வழங்கப்படுகிறது . மேலும் , சில அறக்கட்டளைகள் சார்பாகவும் மனித நேயத்துடன் வழங்கும் இலவச கண் புரை அறுவை சிகிச்சைகளுக்கு ஆதரவும் , பரிந்துரை செய்வதில் பெருமிதமும் கொள்வோம். .
Comments
Post a Comment