கண்கள் பாதுகாப்பு குழந்தை முதல் முதியவர் வரை!

கண்கள் பாதுகாப்பு

குழந்தை முதல் முதியவர் வரை

மூளையின் சாளரம் கண்கள் ஐம்புலன் அறிவில் முதன்மையானது  கற்பனை அறிவிற்க்கும் காட்சி புலனறிவிற்கும் உகந்த வலது மூளையின் வசந்தம் கண்கள். கண்களின் அமைப்பு, செயல்பாடுகள் நோய் தன்மைகள், குறைபாடுகள், தீர்வுகள், குணப்படுத்தும் முறைகள், உணவு முறைகள், பாதுகாக்கும் முறைகள் என சில முக்கிய விவரங்களை கண்களின் கதம்பமாய்காண்போம்.

அழகியலும் கண்களும் :

கண்கள் பேச வேண்டும் மன எண்ணங்களை வெளிப்படுத்தும் உடல் அசைவு மொழிகளில் இன்றியமையாதது கண்கள். கோபம், வருத்தம், பயம், கவலை, ஆனந்தம், கருணை என பல்வகை உணர்ச்சிகளை வெளிக்காட்டும் வாசல் நமது கண்கள். அழகுக்கலை நிலையத்தில் கண்கள் மிக முக்கியமான நிலையில் உள்ளது கண்களை சுற்றி கருவளையம், சற்று வீக்கமான நிலை இவைகளுக்கு முக்கிய காரணம் உணவில் உப்பு அதிகம் சேர்ப்பது, கவலை, தூக்கமின்மை, ஒவ்வாமை, மூக்கு அழற்சி என பல காரணங்கள் உண்டு. அவற்றை கருத்தில் கொண்டு சரிசெய்ய வேண்டும். பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம், போதுமான தூக்கம் மிகவும் நல்லது . அழகு கூட்ட உதவும் விழி ஓட்டு வில்லைகளும் பயன்படுத்தலாம்.

விளையாட்டுத்துறையும் கண்களும் :

விளையாட்டுத் துறையில் பார்வையின் பங்கு என்ன? பார்வைத்திறன், வண்ணம் பிரித்துணரும் திறன், பார்வைக்களம் திறன், எவ்வளவு தூரத்தில் ஒரு பொருள் உள்ளது அதன் உயரம், பருமன் அளவு எல்லாவற்றையும் கணக்கிடும் திறன் படைத்த கண்களை முறையாக பரிசோதித்து தகுதி சான்று பெற வேண்டும். மேலும் பல்வேறு விளையாட்டு துறைகளுக்கான சிறப்பு கண் பயிற்சிகளை செய்து தகுதி திறனை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறை விளையாட்டுக்களுக்கானசிறப்பு கண் கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பு கண் கண்ணாடிகள் என தேவையை அறிந்து ஆலோசனைப் பெற்று அணிதல் வேண்டும், மேலும் ஒருசில விளையாட்டுகளுக்கு கண்ணாடிகள் நழுவி தொந்தரவு செய்யாவண்ணம் ரப்பரினால் ஆன பட்டை அணிய வேண்டும்.

 கண்களும், பாதுகாப்பும்

தொழிலகம், உற்பத்தி சேவை சார்ந்த பல தொழிலகங்களில் பணிபுரிவோர், இல்லத்தரசிகள், பள்ளி மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினரும் கண்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் பயிற்சி பெற வேண்டும். உலோகத் தூள், கண்ணாடித் தூள், மரத்தூள், மண் துகள் தூசிகள் என கண்களில் விழ வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பு கண்ணாடி அணிய வேண்டும். அதையும் மீறி கண்களில் பட்டுவிட்டால் கண்களை கசக்காது அருகில் உள்ள கண் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும். இவ்வகைப்பட்ட தொழில்சார் தொழிலாளர்கள் பார்வையை பாசோதித்து தகுந்த பாதுகாப்பு கண்ணாடிகளை தகுந்த திறன் பொருந்திய வில்லைகனை பொருத்தி பயனுற வேண்டும் . கதிர் வீச்சு அபாயம் உள்ள தொழில்களில் உள்ளோரும் இதனை பின்பற்ற வேண்டும்,

பார்வையும் பயிற்சிகளும்

பல்வேறு பயிற்சிகள் பார்வைத் திறனை மேம்படுத்தவும், பாதுகாப்பு வழங்கவும் தரப்படுகிறது. சிறு வயதில் ஏற்படும் கண் சோம்பல் குறைபாடு, மாறுகண் குறைபாடு, குவியத்திறன் குறைபாடு, மேலும் பல குறைபாடுகளுக்கும், பார்வைத்திறன் உயர்த்தும் பயிற்சிகள் உள்ளன. அவற்றை போதுமான நேரத்தில் கண் மருத்துவர் மற்றும் விழி ஒளி பரிசோதகரிடம் சென்று ஆலோசனை பெற்று ஒளி படைத்த கண்களை பெற்று சிறப்பான பார்வையை பெறவும், தகுதிச் சான்று பெறவும் விளையாட்டு, விஞ்ஞானம் என அனைத்து துறையிலும் சாதிக்கவும் இன்றே பயிற்சியில் ஈடுபட பரிந்துரை செய்கிறேன்.

குழந்தைகளும் கண்களும் :

பிறந்த குழந்தை முதல் 12 வயதுள்ள குழந்தைகள் வரை கண்களை முறையே பரிசோதித்து கொள்ளுதல் அவசியம். பார்வைத்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு கண்ணாடி மட்டுமின்றி அவர்களுடைய கண்களையும், கண்காணிக்க வேண்டும். முறையான பயிற்சிகள் அவர்களுடைய பல்வேறு கண் பிரச்னை, குறைபாடுகளுக்கு தீர்வாய் அமையலாம். அதேபோன்று குழந்தை பருவத்திலேயே உணவும் ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வும் அதன் பழக்கவழக்கங்களையும் கற்றுத் தர வேண்டும். தம்பதியர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள், தனிக்குடித்தனம் இருப்பவர்கள் முன்பே தயாரித்து பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்களை தாமும் குழந்தைகளுக்கும் பழக்கப்படுத்திவிட்டு பிறகு இது குறை.. அது குறை என கவலைப்படுவதில் பயனில்லை.

பதின்ம பருவமும் கண்களும் :

பதிமூன்று முதல் 20 வயது வரை உள்ள இளம்பருவத்தில் கண்களின் முக்கியத்துவம் உணர்ந்து கண் பரிசோதனை, கண்களுக்கு நலம் பயக்கும் ஊட்டச் சத்து உண்ணுதல், சிலவகை பயிற்சிகளை மேற்கொண்டு கண்களின் பார்வைத் தகுதி திறனை அதிகப்படுத்துதல் அவசியம். மிக மிக அவசியமான ஒன்று என்னவென்றால், ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வின் நோக்கம் வாழ்வில் பிடித்த துறை, சாதிக்க வேண்டிய இலக்கு இவைகளில் கண்களின் பங்கையும்தகுதி சான்றும் உணர்ந்து ஆரம்ப நிலையிலேயே துறை தேர்ந்தெடுத்தலில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் காலம் கடந்த பின்புதான் இத்தொழிலுக்கு, வேலைக்கு தகுதியில்லை என நிராகரிக்கப்படும் நிலை வரலாம்.

20வயது முதல் 40 வயது வரை :

 இவ்வயதிற்கு உட்பட்டவர்களில் கண்ணாடி அணிவோர் வருடம் ஒருமுறையும், எவ்விதமான பிரச்னையும் இல்லாதவர்கள் மூன்று வருடத்திற்கு ஒருமுறையும் கண்களை பரிசோதித்து கொள்ள வேண்டும். கணினி, கைபேசிகளை அளவுடன் பயன்படுத்த வேண்டும். மேலும் தவிர்க்க முடியாதவர்கள் அதற்காக பரிந்துரைக்கப்படும் கதிர் தடுப்பு பிரதிபலிக்கும் வில்லைகளை அணியலாம். மேலும் பரிந்துரைக்கும் பயிற்சிகளையும் உணவுகளையும் பின்பற்றலாம்

40 வயது முதல் 60 வயது வரை :

இவ்வயதுக்கு உட்பட்டவர்கள் கண் பார்வை பரிசோதனை, கண் அழுத்த பரிசோதனை, வெள்ளெழுத்து திறன் பரிசோதனை, நீரிழிவு, ரத்த அழுத்தம் சார்ந்த விழித்திரை பரிசோதனை இவைகளை வருடம் ஒருமுறையேனும் பரிசோதித்து பரிந்துரைக்கும் கண்ணாடிகள் மற்றும் அவரவர் தொழிலுக்கு ஏற்ற வகையில் வகைப்படுத்தப்பட்ட கண்ணாடிகளை அணிந்து பயன் பெறவும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இவர்கள் மேலும் கவனமாக வருடம் ஒருமுறையேனும் பரிசோதித்து வயது சார்ந்த கண்புரை, பார்வைக்குவிய மைய பரிசோதனை வயது சார்ந்த நரம்புசார் பிரச்னைகள், ஊட்டச்சத்து பற்றாக்குறையினால் ஏற்படும் விழித்திரை பார்வைத் திறன் குறைபாடு இவைகளை முறையே பரிசோதித்து தகுந்த ஆலோசனை மற்றும் கண் கண்ணாடிகள், அறுவை சிகிச்சை பெற கண் மருத்துவர்கள் மற்றும் விழி ஒளி பரிசோதகர்களை அணுகவும்

மிகு குறை பார்வையும் தீர்வும் :

உலக பொது சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் அளவுப்படி பார்வை திறன் இருக்க வேண்டும் திறன் குறைபாடு உள்ளோர் திறன் நிறை வில்லை கொண்டு பார்வைத் திறனை மேம்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். கண் கண்ணாடி மற்றும் அறுவை சிகிச்சை, மருத்துவம் என பல முயன்றும் பார்வைத் திறன் சரிவர இல்லாதோர் மிகு குறை பார்வையும் தீர்வும் பெற தகுந்த உதவி உப கண்ணாடிகளையும் பயிற்சிகளையும் சரிவர பயன்படுத்தி மற்றவர்கள் உதவியின்றி வாழ வழிவகை செய்து கொள்ளும் அளவிற்காவது முயற்சிக்க வேண்டும். மேலும் சிலருக்கு மன அளவிற்கு ஆலோசனையும், அவர்கள் எதிர்கால தேவைகளையும், வாழ்வியல் பொருளாதார தேவைகளையும் சுயமாக பெற்றிடும் அளவிற்காவது அவர்களை தயார்படுத்த வேண்டும். குறைந்தபட்சம் அவரவர்களின் சுய உணவு, சுய கடமைகள் நிறைவேற்றும் அளவிற்காவது தயார்படுத்த வேண்டும் . தேசிய பார்வை குறை தடுப்பு இயக்ககம் இதற்கான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் இலவசமாக வழங்குகிறது .

கண்களும் காப்பீடும்

இன்று காப்பீடு திட்டத்தின் கீழ் உடல் உறுப்புகள் அனைத்தும் காப்பீடு செய்யப்படுகிறது பல சிறப்பு காப்பீடுகளும் உள்ளன. மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் கண்புரை அறுவை சிகிச்சை, கண் அழுத்த அறுவை சிகிச்சை என பல்வேறு கண் சிகிச்சைகளுக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவம் செய்யப்படுகிறது. அரசு மருத்துவ காப்பீடும் தன் பங்கிற்கு உதவிகளை செய்கிறது. சில அழகியல் கண் அறுவைக்கும் கண் கண்ணாடிகளுக்கும் சில காப்பீடு திட்டங்களே உலகில் உள்ளன. அவரவர் வசதிக்கும், தேவைக்கும் ஏற்ப காப்பீடு செய்தும் கண்களை காப்பீர்.

 

தொழிலகம், உற்பத்தி சேவை சார்ந்த பல தொழிலகங்களில் பணிபுரிவோர், இல்லத்தரசிகள், மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினரும் கண்களை பாதுகாக்கவும் பராமரிக்கவும் பயிற்சி பெற வேண்டும். உலோகத் தூள் கண்ணாடித் தூள், மரத்தூள், மண் துகள் , தூசிகள் என கண்களில் விழ வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பு கண்ணாடி அணிய வேண்டும். அதையும் மீறி கண்களில் பட்டுவிட்டால் கண்களை கசக்காது கண் மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்

Comments

Popular posts from this blog

வெள்ளெழுத்து ஏன்?

கண் பாதுகாப்புக்கு என்ன சாப்பிடலாம்?

வியப்பூட்டும் லேசர் சிகிச்சை